Wednesday, October 23, 2013

சொந்த ஊரில் சில நாட்கள்..

நீண்ட நாட்களுக்கு (வருடங்களுக்கு!!) பிறகு சொந்த ஊரான சிதம்பரத்திற்கு சென்று பத்து நாட்கள் தங்கினேன். ஊர் நிறையவே மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் அடுக்கு மாடி குடியிருப்புகள், அடுமனைகள், பல்பொருள் அங்காடிகள், ஏ டி எம், மாரி பிரவுன் போன்ற உணவகங்கள், CBSE பள்ளிகள், இன்னும் இப்படி சொல்ல எத்தனையோ! வீதிகளும், சில முக்கிய சாலைகளும் ஒருவழி பாதை ஆகிவிட்டன. 

 ரயில்வே கிராசிங் மேம்பாலத்தில் இருந்து கீழே தெரியும் வாண்டையார் திருமண மண்டபத்தையும், தொலைத்தூர கல்வி இயக்ககத்தைப் பார்க்கும் போது ஒருவித சந்தோஷம் தோன்றியது.  பலமுறை பெட்ரோல் போட்டுவிட்டு, மூடிய கேட்டின் பின்னே எப்போது ரயில் போகும், கேட்டை தூக்குவார்கள் என்று பொறுமையின்மையுடன் நின்றது நினைவுக்கு வந்தது. நீண்ட நேரம் நிற்கும் சமயங்களில், எப்படியும் தோழிகள்  யாராவது கண்ணில் மாட்டுவார்கள். நேரத்தை கடத்த, அருகில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் வாசலில் இருந்த மரத்தின் அடியில் நின்று பேசிக் கொண்டிருப்போம்.  இவையெல்லாம் நினைவுக்கு வர, இந்த முறை எப்படியும் திருமணம் ஆகி சிதம்பரத்திலேயே இருக்கும் தோழிகள் அனைவரையும் பார்த்து விட வேண்டும் என்று ஆவல் எழுந்தது. ஆனால் நினைப்பது எல்லாம் நடந்து விடுமா? ஒரே ஒரு தோழியை தவிர்த்து வேறு யாரையும் சந்திக்க முடியவில்லை.

தங்கி இருந்த அத்தனை நாட்களும் தினமும் மாலை வேளையில் பல்கலைக்கழகத்தை நிதானமாக காரில் சுற்றி வந்தது நல்ல அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு துறையின் கட்டிடத்தையும் பார்க்கும்போதும் மகள் சாத்விகா "இது அம்மா காலேஜ், இது தாத்தா காலேஜ்" என்று மழலையில் சொல்லிக் கொண்டே வந்தாள்.  

இந்த பயணம் எங்களுக்கு ஆன்மிக பயணமாகவும் அமைத்து விட்டது. திருத்துறைபூண்டி அருகே உள்ள பழயங்குடி அம்மன்; கும்பகோணம் அருகே உள்ள திருகருகாவூர்; சீர்காழி திருகோலக்காவில் உள்ள ஓசை நாயகி அம்மன்; புவனகிரி ராகவேந்திரா திருக்கோவில்; சிதம்பரம் தில்லை காளி; பாண்டி அரவிந்தர் ஆசிரமம்; மணக்குள விநாயகர் என எல்லா எல்லா கோவில்களுக்கும் சென்று தரிசித்து வந்தோம்.

"பாட்டி வீட்டிலேயே இருக்கலாமே அப்பா" சாத்விகாவின் ஏக்கம் எங்களையும் தொற்றிக் கொண்டது. மனமில்லாமல் ஊர் திரும்பினோம்.

Sunday, October 13, 2013

நெல்லிக்காய் இனிப்பு பச்சடி

முதல் பதிவை எந்த இனிப்புடன் தொடங்கலாம் என்று எண்ணும் போதே, அம்மாவின்  "நெல்லிக்காய் இனிப்பு பச்சடி" நினைவுக்கு வந்தது. மிகவும் எளிமையாய் செய்ய கூடியது, ஆரோக்கியமானதும் கூட! நெல்லிக்காயின் மருத்துவ குணம் அனைவரும் அறிந்ததே அத்துடன் வெல்லம் சேர்ப்பதால், உடலுக்கு நல்லது.

நெல்லிக்காயின் சில மருத்துவ பயன்களை :

1. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. 

2. நினைவாற்றலை பெருக்க உதவும்.

3.இளமையுடன் தோற்றமளிக்க உதவும்.

4. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.

5. சரும பிரச்சனைகளை குணப்படுத்தும்.   

தேவையான பொருட்கள் :

1. நெல்லிக்காய் - 2 கப் 

2. வெல்லம் - 1 கப் (பொடிந்தது)

3. உப்பு - சிறிது 

4. தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (தேவையெனில்)



செய்முறை :

1. நெல்லிக்காயை கழுவி, சுத்தப்படுத்தி அடிகனமான வாணலியில் தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

2. பொடிந்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து, நன்கு கிளறி ஜாம் பதம் வந்தவுடன், தேங்காய் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு :

1. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம். சுவையும், மனமும் கூடும்.

2. மிகவும் சிறிய குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பினால், கொட்டையை நீக்கி விட்டு, சதை பகுதியை மட்டும் கொடுக்கவும்.